குறிஞ்சிப்பாட்டு – அறிமுகம்
குறிஞ்சிப்பாட்டு – அறிமுகம் பாட்டும் புலவரும் ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் பல புலவர்களால் இயற்றப்பட்ட பல பாடல்களின் தொகுப்பாகிய எட்டு நூல்கள் எட்டுத்தொகை என்றும் பத்து நீண்ட பாடல்கள் பத்துப்பாட்டு என்றும் அழைக்கப்படுகின்றன . பத்துப்பாட்டில் உள்ள பாடல்களில் குறிஞ்சிப்பாட்டும் ஒன்று . அது 261 அடிகளைக்கொண்ட பாடல். இப்பாடல் ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது . குறிஞ்சிப்பாட்டு கி . பி . இரண்டாம் நூற்றண்டில் இயற்றப்பட்டாதாக மா . இராசமாணிக்கனார் கூறுகிறார் . ( சங்க இலக்கிய வரலாறு , மா . ரா . களஞ்சியம் , காவ்யா பதிப்பகம் , பக்கம் 210) கபிலர் வரலாறு குறிஞ்சிப்பாட்டை இயற்றிய புலவரின் பெயர் கபிலர் . கபிலர் திருவாதவூரில் பிறந்தவர் . திருவாதவூர் மதுரைக்கு 25 கி . மீ வடக்காகவும் மேலூருக்கு 8 கி ,. மீ மேற்காகவும் உள்ளது . திருவாசகத்தை எழுதிய மாணிக்கவாசகரும் திருவாதவூரில்தான் பிறந்தார் என்பது குறிப்பிடத் தக்கது . கபிலர் அந்தணர் குலத்தில் பிறந்தவர். அவர் ‘ புலன் அழுக்கற்ற அந்தணாளன் ’ என்று மாறோக்கத்து நப்பசலையார் என்ற புலவரால் புகழப்ப...