குறிஞ்சிப்பாட்டு – அறிமுகம்


குறிஞ்சிப்பாட்டுஅறிமுகம்

பாட்டும் புலவரும்
ஏறத்தாழ இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் பல புலவர்களால் இயற்றப்பட்ட பல பாடல்களின் தொகுப்பாகிய எட்டு நூல்கள் எட்டுத்தொகை என்றும்  பத்து நீண்ட பாடல்கள் பத்துப்பாட்டு என்றும் அழைக்கப்படுகின்றன.  பத்துப்பாட்டில் உள்ள பாடல்களில் குறிஞ்சிப்பாட்டும் ஒன்று. அது  261 அடிகளைக்கொண்ட பாடல்.  இப்பாடல் ஆசிரியப்பா வகையைச் சார்ந்தது.  குறிஞ்சிப்பாட்டு கி. பி. இரண்டாம் நூற்றண்டில் இயற்றப்பட்டாதாக மா. இராசமாணிக்கனார் கூறுகிறார். (சங்க இலக்கிய வரலாறு, மா. ரா. களஞ்சியம், காவ்யா பதிப்பகம், பக்கம் 210)

கபிலர் வரலாறு
குறிஞ்சிப்பாட்டை இயற்றிய புலவரின் பெயர் கபிலர். கபிலர் திருவாதவூரில் பிறந்தவர். திருவாதவூர் மதுரைக்கு 25 கி. மீ வடக்காகவும் மேலூருக்கு 8 கி,.மீ மேற்காகவும் உள்ளது. திருவாசகத்தை எழுதிய மாணிக்கவாசகரும் திருவாதவூரில்தான் பிறந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.

கபிலர் அந்தணர் குலத்தில் பிறந்தவர்.  அவர் புலன் அழுக்கற்ற அந்தணாளன்என்று மாறோக்கத்து நப்பசலையார் என்ற புலவரால் புகழப்பட்டவர் (புறநானூறு - 126).  கபிலர் பாடியதாக 234 செய்யுட்கள் எட்டுத்தொகை நூல்களில் காணப்படுகின்றன.  குறிப்பாக, இவருடைய பாடல்களில், புறநானூற்றில் 28 பாடல்களும், கலித்தொகையில் காணப்படும் குறிஞ்சிக் கலி எனப்படும் 29 பாடல்களும், குறுந்தொகையில் 28 பாடல்களும், நற்றிணையில் 20 பாடல்களும், அகநானூற்றில் 18 பாடல்களும், பதிற்றுப்பத்தில் 10 பாடல்களும் , ஐங்குறுநூற்றில் 100 பாடல்களும் உள்ளன.  ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழின் இனிமையை எடுத்துரைக்க, இவர் இயற்றிய குறிஞ்சிப் பாட்டு பத்துப்பாட்டில் உள்ளது.  இவர் குறிஞ்சித் திணைச் செய்யுட்கள் இயற்றுவதில் மிகுந்த ஈடுபாடு உடையவர்.  இவரால் பாடப்பெற்றோர்: அகுதை, இருங்கோவேள், ஓரி, செல்வக் கடுங்கோ வாழியாதன், சேரமான் மாந்தரஞ் சேரலிரும்பொறை, நள்ளி, மலையமான் திருமுடிக்காரி, விச்சிக்கோன், வையாவிக் கோப்பெரும் பேகன், வேள் பாரி.

       சேரமான் செல்வக் கடுங்கோ வாழியாதனைப் பற்றி இவர் இயற்றிய பாடல்கள் பதிற்றுப்பத்தின் ஏழாம் பத்தாக அமைந்துள்ளது.  இவர் இயற்றிய பாடல்களால் பெருமகிழ்ச்சி அடைந்த செல்வக் கடுங்கோ வாழியாதன், நன்றா என்னும் குன்றேறி நின்று கண்ணிற்கெட்டிய இடமெல்லாம் இவருக்குப் பரிசாக அளித்தது மட்டுமல்லாமல் நூறாயிரம் பொற்காசுகளும் தந்தான்.  ஆனால், கபிலர் தான் பெற்ற பரிசையெல்லாம் பிறருக்கு அளித்து, வள்ளலாகவும் துறவியாகவும் வாழ்ந்தார்.

       கபிலர் வேள் பாரியின் நெருங்கிய நண்பர்.  வேள் பாரி இறந்தபின், அவன் மகளிர்க்குத் திருமணம் செய்விக்கும் பொறுப்பினை ஏற்றுக் கபிலர் பல முயற்சிகள் செய்தார்.  முடிவில், பாரி மகளிரை ஒரு பார்ப்பனக் குடும்பத்தில் ஒப்படைத்துத் தான் வடக்கிருந்து உயிர் நீத்ததாகக் கருதப்படுகிறது.
       கபிலர் என்ற பெயருடைய வேறு சில புலவர்களும் இருந்ததாகத் தமிழ் இலக்கிய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

குறிஞ்சித்திணை
காதல் வாழ்க்கையில் நடைபெறுகின்ற நிகழ்வுகளை மையக்கருத்தாகக் கொண்ட பாடல்கள் அகத்திணைப் பாடல்கள் என்றும், காதலைத் தவிர மற்ற கருத்துக்களை மையமாகக்கொண்ட பாடல்கள் புறத்திணைப் பாடல்கள் என்றும் தொல்காப்பியம் கூறுகிறது. அகத்திணைப் பாடல்களை, கைக்கிளை, குறிஞ்சி, பாலை, முல்லை, நெய்தல், மருதம் மற்றும்  பெருந்திணை என்று ஏழுதிணைகளாகத் (பிரிவுகளாகத்) தொல்காப்பியம் பிரிக்கிறது. கைக்கிளைத்திணை  என்பது ஒருதலைக் காதலையும், குறிஞ்சித்திணை என்பது காதலர்கள் சந்திப்பதைப் பற்றியும்,  பாலைத்திணை  என்பது காதலர்களிடையே நிகழும் பிரிவைப் பற்றியும், முல்லைத்திணை என்பது காதலனைப் (அல்லது கணவனைப்) பிரிந்திருக்கும்பொழுது காதலி (அல்லது மனைவி), பிரிவினால் ஏற்படுகின்ற துயரத்தைப் பொறுத்துக்கொண்டு இருப்பதையும், நெய்தல் திணை என்பது பிரிவின் துயரத்தின் மிகுதியால் காதலி (அல்லது மனைவி) இரங்குவதையும், மருதத்திணை என்பது பிரிந்து சென்ற கணவன் வீடு திரும்பியதும் அவனோடு மனைவி விளையாட்டுக்காகக் கோபித்துக் கொள்வதையும், பெருந்திணை என்பது பொருந்தாக் காதலையும் குறிக்கும் ஏழு திணைகளாகும். குறிஞ்சிப்பாட்டின் மையப்பொருள் தலைவனும் தலைவியும் சந்திப்பது. ஆகவே, அது குறிஞ்சித்திணையைச் சார்ந்தது.

அறத்தொடு நிற்றல்
தொல்காப்பியத்தில்,  அறத்தொடு நிற்றல்என்ற ஒருசெய்தி குறிப்பிடப்பட்டிருக்கிறது. அகத்திணைப் பாடல்களில் காதல் வாழ்க்கையை களவுகற்பு என்று இரண்டாகப் பிரிப்பது வழக்கம். திருமணத்திற்கு முந்திய காதல் வாழ்கை களவு என்றும் திருமணத்திற்குப் பிந்திய காதல் வாழ்க்கை கற்பு என்றும் கருதப்பட்டது. தலைவனும் தலைவியும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மற்றவர்களுக்கும் தெரியாமல் களவொழுக்கத்தில் ஈடுபட்டிருந்ததை முறையாக வெளிப்படுத்துவது அறத்தொடு நிற்றலாகும். தலைவியின் காதல், தோழிக்குத் தெரியும். தக்க சமயத்தில் தோழி, தலைவன்தலைவி காதலைத் தன் தாய்க்குத் தெரிவிப்பாள். தோழியின் தாய் அந்தச் செய்தியைத் தலைவியின் தாய்க்குத் தெரிவிப்பாள். தலைவியின் தாய் தன் கணவனுக்குத் தெரிவிப்பாள். பின்னர் திருமணம் நடைபெறும். இவ்வாறு தோழி, தோழியின் தாய், தலைவியின் தாய் ஆகியோர் தலைவன்தலைவியின் காதலை முறையாக  வெளிப்படுத்துவதின் நோக்கம் அவர்கள் காதல் திருமணத்தில் நிறைவு பெறவேண்டும் என்பதுதான். தலைவன்தலைவியின் காதல், களவொழுக்கத்திலிருந்து கற்பொழுக்கமாக மாறுவதற்காகத் தோழி, தோழியின் தாய், தலைவியின் தாய் ஆகியோர் செய்யும்  செயல்களை அறத்தொடு நிற்றல் என்று தொல்காப்பியம் குறிப்பிடுகிறது. அறத்தொடு நிற்றல் என்பது குறிஞ்சித்திணையின் ஒரு பிரிவாகும். குறிஞ்சிப்பாட்டு குறிஞ்சித்திணையையும் அதன் ஒருபிரிவாகிய அறத்தொடு நிற்றல் என்ற துறையையும் சார்ந்த பாட்டு.

குறிஞ்சிப்பாட்டு ஏன் எழுதப்பட்டது?
ஆரிய மன்னன் பிரகத்தனுக்குத் தமிழ் கற்பிப்பதற்காக் குறிஞ்சிப்பாட்டு எழுதப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதைவிட, காந்தர்வ மணத்திற்கும் களவொழுக்கத்திற்கும் உள்ள வேறுபாட்டை ஆரிய மன்னன் பிரகத்தனுக்கு விளக்குவதற்காகக் கபிலர் குறிஞ்சிப்பாட்டை எழுதினார் என்பது சிறந்ததாகக் கருதப்படுகிறது. காந்தர்வர்கள் இருவர் தற்செயலாகச் சந்தித்து, காதலித்து, இருவரும் சேர்ந்து வாழ்வது காந்தர்வ மணம். அவர்கள் திருமணம் செய்துகொள்ளாமலே தங்கள் வாழ்கையை நடத்துவார்கள். ஆனால், சங்க காலத்தில், களவொழுக்கத்தில் சந்தித்தித்துக் காதலிக்கும் தலைவனும் தலைவியும், இரண்டு மாதங்களுக்குள் தங்கள் காதலைப் பெற்றோருக்குத் தெரிவித்து, அவர்கள் சம்மததத்துடன் திருமணம் செய்துகொள்வது அல்லது பெற்றோர்கள் சம்மதிக்காவிட்டால், தலைவன் தலைவியைத் தன்னுடைய ஊருக்கு அழைத்துச் சென்று ஊரறியத் திருமணம்  செய்துகொள்வது மரபாக இருந்து. களவொழுக்கம் திருமணத்தில் நிறைவுபெற்று இல்லறம் நடத்துவதுதான் தமிழர் வாழ்வியலாக இருந்தது. காந்தர்வமணத்திற்கும் கலவொழுக்கத்திற்கும் இடையே இருந்த இந்த வேறுபாட்டை ஆரிய மன்னன் பிரகத்தனுக்கு விளக்குவதுதான் கபிலர் குறிஞ்சிப்பாட்டை இயற்றியதின் நோக்கமாக இருந்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது.

Comments

  1. வணக்கம் ஐயா.
    நான் திருநாவுக்கரசு.
    மகத்து வாழ்க்கை பாலசுப்ரமணியன் மகன்...

    அனைத்தையும் படித்து பயனடைகிறேன் ....

    மிக்க மகிழ்ச்சி.

    வணக்கம்.
    arasu20052000@yahoo.com.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

குறிஞ்சிப்பாட்டு மூலமும் உரையும்

Letter to the Readers