குறிஞ்சிப்பாட்டு – பொருட்சுருக்கம்


குறிஞ்சிப்பாட்டுபொருட்சுருக்கம்

தலைவியின் நிலையைக் கண்டு மனம் கலங்கிய செவிலித் தாய்
தாயே! நீ வாழ்க! நான் கூறுவதை விரும்பிக் கேள். ஓளிபொருந்திய நெற்றியையும், தழைத்த மெல்லிய தலைமுடியையும் உடைய என் தோழியின் மேனியில் அணிந்துள்ள  பெருமைக்குரிய ஆடை அணிகலன்களை நழுவச் செய்த, மருந்துகளால் குணப்படுத்த முடியாத நோயின் காரணத்தை அறிந்துகொள்வதற்காக, இந்த அகன்ற ஊரில் அதுபற்றித் தெரிந்தவர்களிடம் நீ கேட்டாய். பலவேறு உருவங்களில் உள்ள தெய்வங்களை வாயால் வாழ்த்தியும், உடலால் வணங்கியும், பல நிறங்களில் உள்ள மலர்களைத் தூவியும் தொழுதாய்; நறுமணமுள்ள புகையைச் செலுத்தியும் வணங்கினாய். ஆனால், என் தோழி இன்னும் நோயால் வருந்துகிறாள். தலைவியின் நோயின் காரணத்தை அறியாமல் நீயும் தீராத மனக் கலக்கமுற்று வருந்துகிறாய். 

தலைவியின் நிலையை அறிந்துகொண்ட தோழி
அவளுடைய நல்ல அழகு கெடவும், நறுமணமிக்க தோள்கள் மெலியவும்,
வளையல்கள் கழலுவதைப்  பிறர் அறியவும், இவள் உள்ளத்தில் தனிமைத் துயர் தோன்றி வருத்தவும் காரணமாக இவள் உள்ளத்தில் மறைந்திருக்கும் துன்பத்தைப் பற்றி இவளே கூறும்படி என்னுடைய சொல்வன்மையால் நான் வற்புறுத்திக் கேட்டேன்.

தலைவியின் கேள்வி
நான் கேட்டதற்கிணங்க, முத்தாலும், மாணிக்கத்தாலும், பொன்னாலும், மிகுந்த நேர்த்தியாக அமைந்த நகைகள் கெடுமானால் அவற்றை மீண்டும் சீர்செய்ய முடியும். ஆனால், தமக்குரிய சான்றாண்மையும், சிறப்பும், ஒழுக்கமும் சீர்குலைந்தால், கறை போகும்படிக் கழுவி, பொலிவுள்ள புகழை மீண்டும் நிறுவுதல், குற்றமற்ற அறிவையுடைய பெரியோர்களுக்குக்கூட  எளிய காரியம் என்று  தொன்மையான நூலை அறிந்தோர் கூறமாட்டார்கள்.  என் பெற்றோரின் விருப்பமும் எனது மடனும் ஒருசேர நீங்கிப்போக, நெடிய தேரையுடைய என் தந்தையின் அரிய காவலையும் மீறி, தலைவனும் நானும் தேர்ந்து செய்துகொண்ட  திருமணம் இது என்று நாம் என் தாய்க்கு அறிவுறுத்துவதால்  நமக்குப் பழியுமுண்டோ?
அவ்வாறு அறிவுறுத்திய பிறகு, என்னை நான் விரும்பிய தலைவருக்கே திருமணம் செய்துதர அவர்கள் இசையவில்லை என்றால், இறக்கும்வரை நாங்கள் பொறுத்திருப்போம். பின்னர், மறுபிறவியிலாவது நாங்கள் இணைந்திருப்போம்.” என்று கூறி,  மான்கள் விரும்பும் கண்களையுடைய தலைவி, கண்ணீர் மல்கிச் செயலற்று ஆற்றமுடியாத துன்பத்தால் அழுதாள்.

தோழியின் நிலை
பகைமை மேற்கொண்டு போரிடும் இரண்டு பெரிய வேந்தர்களின் இடையே நின்று அவர்களைச் சமாதானம் செய்விக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் சான்றோர் போல, உனக்கும் என் தோழிக்கும் இடையே, நான் அச்சத்துடன் மிகவும் வருந்தி நிற்கிறேன்.

நடந்ததைக் கூறுகிறாள் தோழி
மகட்கொடை கொடுக்குமிடத்தில், எல்லாம் நன்றாக முடிய வேண்டும் என்பதையும், தலைவனின் குடியும் தன்னுடைய குடியும் ஒத்திருக்க வேண்டும் என்பதையும், தலைவனின் பண்புகளையும், அவனது சுற்றத்தாரின் இயல்பையையும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்பதையும் எண்ணிப் பார்க்காமல், நாங்கள் தனியாகத் துணிந்து, களவொழுக்கத்தில், தலைவிக்குப்  பாதுகாவலை உடைய, அரிய செயல் நடந்தவிதத்தை, நீ புரிந்துகொள்ளும்படியாக  நான் கூறுகின்றேன். (அதைக் கேட்டு,) நீ என்னிடம் சினம் கொள்ளாதே!

தினைப்புனம் காவல்
விதையை உடைய மூங்கிலைத் தின்பதற்காக, தன் துதிக்கையை மேலே உயர்த்திய யானை, தன்னுடைய துதிக்கையை, முத்துக்கள் நிறைந்த தந்தத்தில் இறக்கி வைத்தது போல, பஞ்சைப் போன்ற மேல் பகுதியையுடைய, வளைந்த, முதிர்ந்த, பெரிய கதிர்களை நன்றாகத் தன்னிடம் கொண்ட சிறு தினையைத் தின்பதற்காக வரும் பறவைகளை விரட்டிவிட்டு, கதிரவன் மறையும்பொழுதில் திரும்பி வருவீர்களாக”, என்று நீ எங்களை அனுப்பினாய்.
      ஆரவாரம் மிகுந்த மரத்தின் உச்சியில், தினைப் புனத்தைக் காவல் செய்பவன் புலியிடமிருந்து தன்னைக் காப்பாற்றிக்கொள்வதற்காக் கட்டிய பரணில் ஏறி, அங்கு மலைச் சரிவில் உள்ள பிரம்பினால் அழகாகப் பின்னிய தழல் என்ற கருவியையும், தட்டை என்ற கருவியையும், குளிர் என்ற கருவியையும், பிறவற்றையும், கிளியை ஓட்டும் முறைப்படி முறை முறையாகக் கையில் கொண்டு கிளிகளை விரட்டினோம். மிகுந்த கதிர்கள் சுடும் வெப்பத்துடன் அமைந்த ஒளியுடைய நண்பகல் நேரம் வந்தது.

அருவியிலிருந்து வந்த நீர்
வானத்தில் பறக்கும் பறவைகள் தாங்கள் விரும்பும் கூடுகளுக்குச் செல்லுமாறு, நீர் நிறைந்த பெரிய கடல் குறையுமாறு, முகில் கூட்டங்கள் நீரை அள்ளிக் கொண்டு, அகன்ற வானத்தில் வீசுகின்ற காற்றுடன் கலப்பதால், முரசு அதிர்ந்தாற்போன்ற இனிய குரலை உடைய இடியுடன் கூடி, வரிசையாக மேலே சென்று கலங்கி, இனிய இசையை உடைய முரசினையும் ஒளியுடைய அணிகலன்களையும் உடைய முருகன், பகைவர்களைக் கொல்லும்பொருட்டு, கையில் கொண்ட, விளங்கும் இலையையுடைய வேலாயுதத்தைப் போல் உள்ள மின்னலுடனும் இடியுடனும் கூடிய மழை , மலை மீது பொழிந்ததால் அருவியிலிருந்து விழும் நீர்  அழகிய வெள்ளைத் துணிபோல் இருந்தது.

அருவியில் ஆடிய தலைவியும் தோழியும்
அங்கே, மிகுந்த விருப்பமுடையவர்களாக, ஓய்வின்றி விளையாடி, பளிங்கினைக் கரைத்து சொரிந்தாற்போன்ற அகன்ற சுனையில் குடைந்து விளையாடும் இடத்தே, அடர்ந்த மலையில், எங்கள் மனதுக்கு ஏற்பப் பாடி, பொன்னில் பதிக்கப்பட்ட நீல மணியைப் போல, எங்கள் சிறிய முதுகில் தாழ்ந்து கிடந்த, பின்னப்பட்ட கரிய கூந்தலைப் பிழிந்து உலர்த்தினோம்.  உள்ளிடம் சிவந்த கண்களுடையவர்களாக இருந்தோம்.

மலர்களைப் பறித்த தலைவியும் தோழியும்
அரக்கை விரித்தாற்போல் உள்ள பருத்த அழகிய மலை, எருக்கம்பூவுடன் பிற மலர்களின் அழகிலும் மயங்கியதால், விருப்பத்துடன் திரிந்து அவற்றைப் பறித்து, மழை பெய்து கழுவிய அகன்ற பாறையில் குவித்தோம்.  அந்த மலர்கள்: பெரிய இதழுடைய ஒளியுடைய செங்காந்தள், ஆம்பல், அனிச்சம், குளிர்ந்த குளத்தின் குவளை, குறிஞ்சி, வெட்சி, செங்கொடுவேரி, தேமா, மணிச்சிகை, தனக்கு உரித்தாக நாறும் விரிந்த கொத்துக்களையுடைய உந்தூழ், கூவிளம், தீயைப் போன்ற எறுழம், சுள்ளி, கூவிரம், வடவனம், வாகை, வான் பூங் குடசம், எருவை, செருவிளை, மணிப்பூங் கருவிளை, பயினி, வானி, பல கொத்துக்களையுடைய குரவம், பசும்பிடி, வகுளம், பல கொத்துக்களையுடைய காயா, விரிந்த மலராகிய ஆவிரை, வேரல், சூரல், குரீஇப் பூளை, குறுநறுங்கண்ணி, குருகிலை, மருதம், விரிபூங் கோங்கம், போங்கம், திலகம், தேனின் மணத்தையுடைய பாதிரி, செருந்தி, அதிரல், பெரிதும் குளிர்ச்சியுடைய சண்பகம், கரந்தை, குளவி, நறுமணம் கமழும் மா, தில்லை, பாலை, பாறைகளில் படர்ந்த குல்லை, பிடவம், சிறுமாரோடம், வாழை, வள்ளி, நீண்ட நறுமணமான நெய்தல், தாழை, தளவம், முள்ளுடைய காம்பையுடைய தாமரை, ஞாழல், மௌவல், நறுமணமான குளிர்ந்த கொகுடி, சேடல், செம்மல், சிறுசெங்குரலி, கோடல், கைதை, கொங்கு முதிர் நறுவழை, காஞ்சி, மணிக்குலைக் கள் கமழ் நெய்தல், பாங்கர், மராஅம், பல பூக்களையுடைய தணக்கம், ஈங்கை, இலவம், தொங்கும் கொத்துக்களையுடைய கொன்றை, அடும்பு, அமர் ஆத்தி, நெடுங்கொடி அவரை, பகன்றை, பலாசம், பல பூக்களையுடைய பிண்டி, வஞ்சி, பித்திகம், சிந்து வாரம், தும்பை, துழாஅய், சுடர்ப்பூந் தோன்றி, நந்தி, நறவம், நறும் புன்னாகம், பாரம், பீரம், பைங்குருக்கத்தி, ஆரம், காழ்வை, கடிஇரும் புன்னை, நரந்தம், நாகம், நள்ளிருள்நாறி, கருமையான பெரிய குருந்தும், வேங்கையும் வேறு சிலர் மலர்களுமாகும்.

மர நிழலில் தங்கிய தலைவியும் தோழியும்
பறவைகளின் மிகுந்த ஓசையையுடைய, குறுக்கிட்டுக் கிடக்கும் மலைச் சரிவில், பெரிய ஒலியுடன் தெளிந்த சொற்களை இடையிடையே பலமுறைக் கூறி, கிளிகளை விரட்டி, புற இதழ்களைக் களைந்து, பாம்பின் படத்தைப் போல் விரிந்த அல்குலில், கொய்த தழையினால் செய்த ஆடையைக் கட்டி, பல்வேறு நிறங்களில் அழகான மலர்மாலைகளை எங்களுடைய மெல்லிய கரிய கொண்டையில் அழகாகக் கட்டி, நெருப்பைப் போன்ற நிறத்தையுடைய அழகிய தளிர்களையுடைய அசோக மரத்தின் மலர்த் தாதுகள் விழுகின்ற, குளிர்ச்சியான நிழலில் இருந்தோம்.

தலைவனின் வருகை
அப்போழுது, அங்கு ஒரு ஆண்மகன் வந்து கொண்டிருந்தான். அவன், எண்ணெய் தடவிய, சுருண்டு வளர்ந்த, கருமை நிறமுடைய கூந்தலில், குளிர்ந்த நறுமணமான சாந்தினை மணம் கமழப் பூசி முழுகி, ஈரம் உலரத் தலைமயிரை விரலால் அலைத்து, பிணைப்பை அவிழ்த்து, வயிரம் பாய்ந்த அகிலின் அழகிய புகையை ஊட்டி, யாழ் இசையைப் போன்று அழகு மிகுகின்ற தேனீக்கள் ஒலிக்க, இனிமை கலந்து, நீலமணியின் நிறத்தைக் கொண்ட பெரிய கருமையான மயிரின்கண், மலையிலிருந்தும், நிலத்திலிருந்தும், மரத்தின் கிளைகளிலிருந்தும், சுனையிலிருந்தும், பல நிறங்களில் உள்ள மலர்களைத் தேர்ந்து தொடுத்த, குளிர்ச்சியுடைய நறுமணமான மலர் மாலையையும், வெள்ளைப் பனங்குருத்தால் (அல்லது தாழை மடலால்) செய்த மாலையையும், அழகாக, கண்டோர்க்கு அச்சம் உண்டாகுமாறு தலையில் அணிந்திருந்தான். மற்றும், அவன் பசுமையான காம்பையுடைய பிச்சி மலரின் அழகிய இதழ்களால் அழகாகத் தொடுத்த ஒரு மாலையைத் தலையில் சுற்றியிருந்தான். அதுமட்டுமல்லாமல், அவன் சிவப்பு நிறமுள்ள நெருப்பைப் போன்ற ஒளியுடைய பிண்டிப் பூக்களையுடைய அசோக மரத்தின் தளிர்களை ஒரு காதில் செருகியிருந்தான். அத் தளிர்கள் அவனுடைய திரண்ட தோளில் அசைந்துகொண்டிருந்தன. அவன், சந்தனத்தைத் தடவிய வலிமை கொண்ட தன்னுடைய உயர்ந்த மார்பில் தொன்றுதொட்டு அணியும் மரபாகிய நறுமணமான மாலையை அணிகலன்களுடன் அணிந்திருந்தான். செவ்விய இலக்கணங்களுக்கு ஏற்ப அமைந்த  பெரிய முன்னங்கையை உடைய தன்னுடைய பெரிய கைகளில், நல்ல நிறமுடைய வரிந்த வில்லை ஏந்தி, அம்பை ஆராய்ந்து பிடித்திருந்தான். அவன், நுண்ணிய வேலைப்பாடுகளுடன் கூடிய கச்சையை, அசையாதபடிக் இறுக்கிக் கட்டிக்கொண்டு, திருத்தமாக அடியெடுத்து நடக்கும் பொழுதெல்லாம் அவன் அணிந்திருந்த  பொன்னாலான சிறந்த வீரக்கழல்கள் உயர்ந்தும் தாழ்ந்தும் அசைந்தன.

சினமுள்ள நாய்கள் வந்தன
பகைப்புலத்தைப் பாழ்படுத்தும், நெருங்க முடியாத வலிமையுடன், பகைவர்கள் புறமுதுகிட்டு ஓடுவதைக் கண்ட, வேற்படையை உடைய இளைய மறவர்களைப் போல், மிகுந்த சினத்தால் செருக்குற்று, நெருங்குந்தோறும் சினக்கும், மூங்கில் முளையைப் போன்ற ஒளியுடைய பற்களையும், கூர்மையான நகங்களையும் உடைய நாய்கள், இமைக்காத கண்களுடன் எங்களைச் சுற்றி வளைந்து நெருங்க, நாங்கள் நடுங்கினோம். எழுந்து, அடி தளர்ந்து, நாங்கள் வருத்தம் மிக்க நெஞ்சுடையவர்களாக மருண்டு, இடத்தைவிட்டுச் செல்ல முயற்சித்தோம்.

நாய்களை அடக்கிய தலைவன்
தனக்குப் பகையாகிய பிற காளைகளை விரட்டிய, செருக்கு மிக்க, வேறு நிலத்துப் பசுக்களைக் கண்ட காளையைப் போல, அழகுடன் வந்து, நாங்கள் மனக் கலக்கம் அடைந்த வேளையில், நாங்கள் அஞ்சுவதைக் கண்டு தானும் அஞ்சி, எங்களிடம் மென்மையான இனிமையான, பொருத்தமான சொற்களைக் கூறி,  எங்களுடைய ஐந்து பிரிவாகிய கூந்தலையும், பலரால் ஆராயப்பட்ட எங்களுடைய அழகையும் புகழ்ந்து, “ஒளியுடைய வளையல்களையும், அசையும் மென்மையான சாயலையும், அழகிய வளைந்த கொப்பூழினையும், மடமையுடைய ஈரக் கண்களையுமுடைய இளையவர்களே!  நான் வேட்டையாடிய விலங்கு தப்பிப் போன நிலையில் உள்ளேன்” என்று அந்த இளைஞன் கூறி, எங்கள் சொல்லை எதிர்பார்த்து நின்றான்.

நாங்கள் அதற்குப் பதில் கூறவில்லை.  அதனால் அவன் வருந்தி, கலங்கி, “என்னிடமிருந்து தப்பிய விலங்கை நீங்கள் காட்டாவிட்டாலும், என்னுடன் பேசுவது உங்களுக்குப் பழியாகுமா, மென்மையானவர்களே?” என்று கூறினான். பாலையாழில் வல்லவன், நட்டராகம் முற்றுப்பெற்ற பிறகு தன் கையினால் தெறித்த நரம்பைப் போல, இம்மென்று ஒலிக்கும் காதலுடைய பெண்வண்டுகளுடன் ஆண்வண்டுகள் விரும்பி வந்து தங்கும் பூந்தாது உடைய மலர்கள் தழைத்துப் படர்ந்த மரக்கிளையை ஒடித்து, பாகனின் பரிக்கோலால் குத்தப்பட்ட களிற்று யானையைப் போல், அக் கிளையை வெற்றியுண்டாக வீசி, ஓசையோடு குரைக்கும் தன்னுடைய வேட்டை நாய்களின் குரைத்தலை அடக்கி, அவன் எங்கள் விடைக்காகக் காத்து நின்றான்.

தினைக்காவலன் எய்திய அம்பினால் சினமடைந்த யானை
குறுகிய கால்களையுடைய தினை அரிந்த தாளால் செய்த குடிலில் பெண்மானைப் போன்ற அழகிய நோக்கினையுடைய மனைவி குடிக்கக் கொடுக்க, தினைப்புனம் காவல் செய்பவன் ஒருவன், தேனால் செய்த கள்ளினைக் குடித்து, மிகவும் மகிழ்ச்சி அடைந்து, தினைப்புனத்தின் காவலை நிறுத்திய பொழுது, ஒரு யானை பெரிய தினைப்புனத்தில் தினையை உண்டு அழித்தது. அதனால்,  துன்பம் பொறுக்காமல், பாம்பைப் போன்ற அழகிய வில்லில் நாணை ஏற்றி, வருத்தம் மிகுந்து, மிகுந்த சினத்தோடு, வலிமையுடன், உடலில் சினத்திற்குரிய அடையாளங்கள் தோன்ற, அம்பைச் செலுத்தி, தட்டை முதலியவற்றை தட்டி ஒலி உண்டாக்கி, காட்டில் கல்லென்ற ஒலி பிறக்கும்படி வாயை மூடி சீழ்க்கையடித்தவனாய் மிக்க ஒலியை உண்டாக்கி அவன் அந்த யானையை விரட்டினான்., அந்த யானை, கார்கால இடியைப் போலப் பிளிறி, தன் தலைமைக்குத் தக்க கரிய சருச்சரை உடைய பெரிய தும்பிக்கையைப் பெரிய நிலத்தில் சேர்த்துச் சினம் திகழ்வதற்குக் காரணமான மதத்தால் செருக்குடன் மரங்களை முறித்துப் போட்டது.  அது கூற்றுவனைப் போல் எங்களை நோக்கி வர, தப்பிக்க இடம் அறியாது, விரைவாக, எங்கள் திருத்தமான திரண்ட ஒளியுடைய வளையல்கள் ஒலிக்க, எங்களின் நாணத்தை மறந்து, விரைந்து, நடுங்கும் மனது உடையவர்களாக, தலைவனை அடைந்து, கடவுள் ஏறிய மயிலைப் போல நாங்கள் நடுங்கி நின்றோம்.

யானை மீது அம்பைச் செலுத்தினான் தலைவன்
அம்பை விரைவாகச் செல்லும்படி தலைவன் ஏவி, யானையின் அழகிய முகத்தில் புகுத்தியதால் புண்ணாகி, அந்தப் புண்ணிலிருந்து கொட்டும் குருதி, முகத்தில் பரவி, கீழே வடிய, அந்த யானையின் புள்ளியும் வரியும் உடைய நெற்றி அழிந்தது. அந்த யானை, அங்கே நிற்காமல், தன்னை மறந்து புறமுதுகிட்டு ஓடியது.  யானை இருந்த இடம், முருகன் தீண்டியதால் வருத்தமுற்ற பெண்களுக்காக ஏற்படுத்தப்பட்ட வெறியாட்டுக் களத்தைப் போல் காட்சி அளித்தது.

தலைவனைத் தழுவிய தலைவி
திண்மையான கடம்ப மரத்தின் திரண்ட அடிப்பகுதியில் வளைவாகச் சூட்டிய, இறுக்கமாகக் கட்டிய மாலையைப் போன்று, நாங்கள் எங்கள் கோத்த கைகளை விடவில்லை. நுரையையுடைய புது வெள்ளம் பாய்ந்ததால், வலிமையான அலைகள் கரையை இடிக்கும்பொழுது நடுங்கும் வாழை மரத்தைப் போல் நாங்கள் நடுங்கினோம். தலைவன், “அழகிய மென்மையான கூந்தலை உடையவளே! தடுமாறாதே! அச்சம் கொள்ளாதே! உன்னுடைய அழகிய நலத்தை நான் நுகர்வேன்” என்று, மாசு இல்லாத தலைவியின் ஒளியுடைய நெற்றியைத் தடவி, அதன் பின் நீண்ட நேரமாக நினைத்து, தலைவியின் தோழியான என்னுடைய முகத்தை நோக்கி நகைத்தான்.
தலைவி தலைவனோடு கூடல்
அவனை அணுகியபொழுது, தலைவிக்கு நாணமும் அச்சமும் வந்ததால், இவள் அவனிடமிருந்து விரைவாகப் பிரிய முயற்சி செய்தாள். ஆனால், அவன் இவளைப்  பிரிய விடவில்லை.  இவளை அணைத்து இவளுடைய மார்பு தன்னுடைய  மார்பிலே ஒடுங்குமாறு இவளைத் தழுவினான்.

தலைவனின் நாட்டின் வளம்
தலைவனின் நாடு மிகுந்த வளமுடையது.  அங்கு, பழுத்த மிளகு உதிர்ந்து கிடக்கின்ற பாறைகள் சூழ்ந்த  பெரிய சுனையில், பெரிய அடிப்பகுதியை உடைய மாமரங்கள் உள்ளன.  அந்த மாமரங்களிலிருந்து, இனிய கனிகள் உதிர்ந்து அதனுடன் வண்டுகள் சிதறிய தேனும், பலா மரத்திலிருந்து வெடித்துத் தேன் சொரியும் நறுமணமான பழங்களின் சாறும் கலந்து, விளைந்த கள்ளாகியது.  அதனை நீர் என்று எண்ணிக் குடித்த மயில் ஒன்று, பெரிய ஊரின் விழாக் களத்தில் மிகுதியாகத் தாளத்துடன்  எழும் ஓசையுடன் கூடி இனிய இசைக் கருவிகள் ஒலிக்க, கயிறாடும் பெண், கயிற்றில் ஏறி, தாளத்திற்கு ஏற்ப ஆடிப் பின் தளர்ந்தது போல் தளர்ந்தது.  மலையில் உள்ள பெண் கடவுள்கள் ஆடுவதால், தம் நலம் சிறிது கெட்டு,  காண்பவர் விரும்பும்படி, விண்ணைத் தொடும் மலைச் சிகரங்களில் உள்ள குளிர்ச்சியுடைய மணம் வீசும் காந்தள் மலர்கள் உதிர்ந்து பரவி, பலப்பல துணிகளை விரித்த களத்தைப் போல் காட்சி அளிக்கின்றன. தலைவன் அத்தகைய வளம் மிகுந்த அழகான நாட்டுக்குரியவன்.

தலைவன் இல்லறம் நாடினான்
தலைவியை விரும்புகின்ற பெரிய வெற்றியை உடைய தலைவன், தலைவியின் உள்ளத்தின் தன்மையை அறிந்து கொண்டு, “பெரிய தகுதியுடையவளே! விழாக் கொண்டாடினாற்போல் பெரிய பானையில் சோறு சமைத்து, வருபவர்களுக்கு எல்லையில்லாமல் உண்ணுவதற்குக் கொடுத்து, செல்வமுடைய இல்லம் பொலியுமாறு, அகலத் திறந்த வாசலுடன் பலர் உண்ணும்படி, பசுமையான கொழுப்புடன், ஒழுகுகின்ற நெய் நிறைந்த சோற்றை, குற்றமில்லாத உயர்ந்த குடியின் சான்றோர், மற்றும் சுற்றத்தாரும் விருந்து உணவாக உண்டு மிஞ்சியதை, உன்னுடன் உண்ணுதல் உயர்ந்தது”, என்றும், அறமுடைய இல்லறம் தங்களுக்குப் புணையாக இருக்கும் என்றும் தலைவிக்கு விளக்கினான்.

சூளுரை தந்து அவளை ஆற்றுவித்தான்
உயர்ந்த மலையின் மீதுள்ள கடவுளான முருகனை வாழ்த்தி, கையால் தொழுது, தலைவி இன்பமுறுவதற்காக உண்மையான சூளுரையைக் கூறி, அழகிய இனிய தெளிந்த நீரை அவன் குடித்ததான்.  தலைவியின் மனம் அமைதியடைந்தது. வானத்தில் உறையும் தேவர்கள் விரும்பும் பூக்கள் நிறைந்த சோலையில், அரிய காட்டில் உள்ள களிற்று யானையால் கூடின அவர்கள், ஒன்றாக அந்தப் பகலைக் கழித்தார்கள்.

மாலைக் காலம் வந்தது
பகல் நேரம் போகும்படி, ஏழு குதிரைகள் பூட்டிய தேரைச் செலுத்திப் பல கதிர்களையுடைய கதிரவன், மலையை அடைந்து மறைந்தான். மான்கள் மரத்தின் அடியில் திரண்டன.  பசுக்கள் கன்றுகளை அழைக்கும் குரலை உடையனவாய் கொட்டில்கள் நிறையுமாறு புகுந்தன.  ஊதுகின்ற கொம்பைப் போல், வளைந்த வாயையுடைய அன்றில் பறவை, உயர்ந்த கரிய பனை மரத்தின் உள் மடலில் இருந்து தன் துணையை அழைத்தது. இரை தேடுவதற்காக, பாம்பு மணியைக் கக்கியது. பல இடங்களில், இடையர்கள் ஆம்பல் என்னும் பண்ணினை இனிய குழலில் ஊதினார்கள்.  ஆம்பல் மலர்களின் அழகிய இதழ்கள் கூம்பின. செல்வமுடைய இல்லங்களில் உள்ள, அழகிய வளையல்களை அணிந்த பெண்கள் விளக்கை ஏற்றினர்.  அந்தணர்கள் அந்திக் கடனை ஆற்றினர். காட்டில் வாழ்பவர்கள் வானத்தைத் தீண்டும் பரண் மேல் ஏறி நின்று தீக்கொள்ளிகளைக் கொளுத்தினர். பெரிய மலையிடத்தே மேகங்கள் சூழ்ந்து கருமை அடைந்தன.  காட்டில் உள்ள விலங்குகள் கல்லென்று ஒலி எழுப்பின. பறவைகள் ஆரவாரித்தன.  சினமுடைய மன்னன் போருக்குச் செல்வதைப் போல, மாலைப் பொழுது விரைவாக நெருங்கிக் கொண்டிருந்தது.

மன்றலில் மணப்பேன் என்று கூறிப் பிரிதல்
நேர்த்தியான உன் முன்கையைப் பற்றி, உன்னை உன் உறவினர் எனக்குத் தர, நாடறியும் நல்ல திருமணத்தினை இன்னும் சில நாட்களில் நான் நடத்துவேன். கலங்குதலைப் தவிர்ப்பீர்களாக! விளங்குகின்ற அணிகலன்களை அணிந்தவர்களே!” என்று நல்ல சொற்களைத் தலைவியின் துன்பம் தீருமாறு தலைவன் கூறினான்.  பின்னர்,  தலைவனும் தலைவியும்  முழவின் ஓசை குறையாத நம்முடைய பழைய ஊரின் வாயிலில் பலரும் நீரை உண்ணும் துறைக்கு வந்தார்கள். தலைவன் எங்களை அங்கே நிறுத்திவிட்டுப் பிரிந்து சென்றான்.

இரவில் தலைவனின் வருகை
அன்றொருநாள் சந்தித்தது தொடங்கி, முதல் நாளில் கொண்ட விருப்பத்துடன் தலைவன், என்றும் இரவில் வருகிறான். அவ்வாறு அவன் வரும்பொழுதெல்லாம், காவலர் விரைந்து காவல் காப்பினும், சினம் மிகுந்த நாய்கள் குரைத்தாலும், தூக்கத்திலிருந்து நீ விழித்தாலும், நிலா ஒளியைப் பரப்பினும், தலைவியைக் காணாது அவளது மூங்கில் போன்ற மென்மையான தோளில் இனிய துயிலை அவன் பெறாமல், வெறிதே திரும்பிச் செல்ல நேரிட்டால், அவன் வெறுப்படைவதில்லை.   அவன் தன் இளமையால் வரம்பு மீறிய செயல்களைச் செய்வதில்லை.  தன் செல்வத்தின் செருக்கால்,  தனக்குரிய நல்ல தன்மையிலிருந்து அவன் விலகியதும் இல்லை.

தலைவியின் துயரம்
இரவில் தலைவன் வரும் வழியில்,  குகையில் வாழும் புலிகளும், யாளிகளும், கரடிகளும், உள்ளே துளையுடைய கொம்புகளுடன்கூடிய காட்டு ஆவினத்தின் காளைகளும், களிற்று யானைகளும் உள்ளன.  வலிமையால் கெடுக்கும் கொடூரமான சினத்துடன் கூடிய இடி முழக்கமும் உண்டு. மற்றும், வருத்தும் கடவுள்களும், இரை தேடும் பாம்புகளும், மறைவிடத்திலுள்ள கருமையான குளங்களில், கொடிய நீர்ச்சுழிகள் இருக்குமிடத்தில் திரிகின்ற,  வளைந்த கால்களையுடைய முதலையும், இடங்கரும், கராமும் உள்ளன. அங்கே,  ஆறலைக் கள்வர்கள் வழிப்போக்கர்களைக் கொன்று குவிக்கும் இடங்களும், வழுக்கும் இடங்களும், முறையான பாதையாகத் தோன்றி செல்லச் செல்ல மறைந்து விடும் பாதைகளும், பேய்களும்,  மலைப் பாம்புகளும் உட்பட பிற, தப்ப முடியாத தொல்லையைத் தரும் விலங்குகளும் இடங்களும் உள்ளன.  இவற்றால், தலைவனுக்கு வரும் இன்னல்கள் தலைவியை வருத்துகின்றன.
அச்சம் தரும் நமது ஊரின்கண் இரவுக் குறியில், தலைவன் தன்னைக்  கூடுவதற்கு வரும் நிலையற்ற நிலையை ஒழுக்கம் அன்று என்று எண்ணி, திருமணத்தை விரும்பி, மழைத் துளிகளால் தாக்கப்படும் மலரைப் போல், தன்னுடைய அழகு அழிந்து, இமைகள் சோர்ந்து, கண்களில் ஈரத்தை உடையவளாய், தலைவி கலங்குகின்றாள். அவளுடைய பெரிய குளிர்ந்த கண்களிருந்து வருத்துகின்ற கண்ணீர் மார்பில் சொட்ட, நாள்தோறும் வலையில் அகப்பட்ட மயிலைப் போல், நலம் தொலைய, மெலிந்து, அவனை நினைக்கும்பொழுதெல்லாம் இவள் அழுகின்றாள்.

Comments

Popular posts from this blog

குறிஞ்சிப்பாட்டு மூலமும் உரையும்

குறிஞ்சிப்பாட்டு – அறிமுகம்

Letter to the Readers